Goldstars News
பிரதான செய்திகள்

நிதிஷ் அரசு மீது பாஜக எம்எல்ஏ பாய்ச்சல் ! - வேளாண் சட்டத்தை மோடி வாபஸ் பெற்றது போல் பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

news-image

பாட்னா: வேளாண் சட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் பெற்றது போல் பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அம்மாநில பாஜக எம்எல்ஏ முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலி, கள்ளமார்க்கெட்டில் மது விற்பனை அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஓட்டல், ரெஸ்டாரன்ட், லாட்ஜ் மதுபானங்கள் எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு, ‘பீகாரில் மதுபானத் தடையை வாபஸ் பெற வேண்டும். இந்த தடையால் பீகார் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்படுகிறது. பீகார் மாநிலத்தை சுற்றியுள்ள மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், நேபாளம் ஆகிய மாநிலம் மற்றும் நாடுகளில் மதுபான விற்பனைக்கு தடையில்லை. அதனால், அண்டை மாநில, நாடுகளில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு பீகாரில் விற்கப்படுகிறது. நிதிஷ் குமார் அரசின் மதுவிலக்கு திட்டமானது முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. கள்ளச்சாரயத்தை குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.

இந்நிலையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்எல்ஏ ஹரி பூஷண் தாக்கூர் கூறுகையில், ‘மதுவிலக்கு சட்ட விவகாரத்தில் மது குறித்த புரிதல் இல்லாமல் போலீசில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மதுவிற்பனை அமோகமாக நடக்கிறது.

மாநில அரசு கும்பகர்ண உறக்கத்தில் உள்ளது. மதுவிலக்கு சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் பீகாரில் கடுமையான விளைவுகள் ஏற்படும். அரசின் மதுவிலக்கு கொள்கையால் மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்ற போல் முதல்வர் நிதிஷ் குமாரும் பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறினார். ஆளுங்கட்சி எம்எல்ஏவே, முதல்வருக்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.