Goldstars News
பிரதான செய்திகள்

இன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

news-image

நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் அபாயமுடைய பகுதிகள் அவதானிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்ட அதே வேளை , கல்முனையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அலையில் பாராளுமன்ற உறுப்பினர் , அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுகின்ற நிலையில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாபாவிற்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை இரண்டாம் அலையின் ஆரம்பகட்டத்தில் காணப்பட்டதைப் போன்று கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது அபாய நிலைக்கான அறிகுறி என்று சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 383 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 58 813 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 50 337 பேர் குணமடைந்துள்ளதோடு , 8193 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 783 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாபாவுக்கும் தொற்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாவிற்கு இன்று தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான ஆறாவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார்.

பாராளுமன்றத்தில் முதலாவதாக தொற்றுறுதி செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீமும் குணமடைந்துள்ளதோடு , சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

 கல்முனை கிராம அலுவலர் பிரிவில் கல்முனை 1 சீ, கல்முனை 1 ஈ, கல்முனை 2, கல்முனை 2 ஏ, கல்முனை 2 பீ, கல்முனை 3 ஏ ஆகிய பகுதிகளும் , கல்முனை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கல்முனை 1 (எம்.டி) , கல்முனைக்குடி 1, கல்முனைக்குடி 2  மற்றும் கல்முனை 3 (எம்.டி.) ஆகிய பகுதிகள் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திக்வெல்ல பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட யோனக்கபுர மேற்கு மற்றும் யோனக்கபுர கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இலக்கம் 140 - போலான தெற்று கிராம அலுவலர் பிரிவின் மெல்கொனிய கிராமம் மற்றும் பூஜாபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பல்லியகோட்டை மற்றும் கல்ஹின்ன கிராம அலுவலர் பிரிவு என்பன இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் மாத்திரம் 480 தொற்றாளர்கள்

இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட 843 தொற்றாளர்களில் 480 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 - 15 வரையான பகுதிகளிலும் , அங்கொட, அத்துரகிரிய, அவிசாவளை, தெடிகமுவ, பொரலஸ்கமுவ, தெஹிவளை, கொடதுவ, ஹபரகட, ஹங்வெல்ல, ஹோமாகம, கடுவெல, கஹதுட்டுவ, கொஹூவல, கொலன்னாவை, கொஸ்கம, மொரட்டுவை, மௌன்ட்லவினியா, முல்லேரியா, நவகமுவ, ரனால, பிலியந்தல, தலங்கம, வெல்லம்பிட்டி, மிரிஹான, கொட்டாவ மற்றும் மஹரகம என கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இவ்வாறு 480 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அநுராதபுர மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள செயற்பாடுகள் இடை நிறுத்தம்

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட ஆபத்தான நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அநுராதபுர மாவட்ட அலுவலகத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நேற்று மாலை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.அலஹகோன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று பதிவான மரணங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கு கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம், ஈரலில் ஏற்பட்ட தொற்று மற்றும் சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகும்.

மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை , கொவிட் நிமோனியா மற்றும் இதய நோய் நிலைமையே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர் கண்டி பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொரோனா நிலைவரம் தொடர்பில் கூறுகையில் ,

நேற்று மதியம் 2 மணி வரை இனங்காணப்பட்டிருந்த 58 430 தொற்றாளர்களில் 54 451 தொற்றாளர்கள் கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது அலையுடன் தொடர்புடையவர்களாவர். சுகாதார அமைச்சின் கீழ் 79 சிகிச்சை நிலையங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில் 13 606 சிகிச்சை படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. 10 112 படுக்கைகள் பாவனையிலுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 14 799 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.