Goldstars News

ஒபாமாகேர் காப்பீட்டில் இணைய டிச.,10 அன்று அமெரிக்காவில் பிரசாரம்

news-image

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நிறைவடைந்து வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான அரசு நடவடிக்கை தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நலன்கருதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஒபாமாகேர் என்ற அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலமாக அதிக செலவு பிடிக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அமெரிக்க நடுத்தர வர்க்கம் மக்களால் இந்த காப்பீட்டை பயன்படுத்தி பலன் அடைய முடியும். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த காப்பீட்டு திட்டத்தை முடக்கி புதிய அரசு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இதனை ஜோ பைடன் கடுமையாக எதிர்த்தார்.

தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி பலர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த காப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன மருத்துவ காப்பீடுகளை ஒப்பிடும்போது அரசு காப்பீட்டில் முதலீடு மிகக்குறைவாக இருக்கும். மாதாமாதம் சிறிய அளவு காப்பீட்டு தொகையை செலுத்தினாலே நடுத்தர வர்க்க மக்கள் அதிக பலன் அடைவர். எதிர்பாராத விபத்து, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு அரசு காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருக்கும்.

தற்போது ஒபாமாகேர் திட்டத்தில் இணையாதவர்கள் அதில் இணையும் படி ஜனநாயகக் கட்சி, தன்னார்வலர்கள் சிலருடன் சேர்ந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காப்பீட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக காப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க நடுத்தர வர்க்க மக்களது விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இதுகுறித்து கெய்சர் பேமிலி பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறுகையில் தற்போது ஒபாமாகேர் காப்பீட்டு திட்டத்தில் இணைவதால் 10 அமெரிக்க குடிமக்களின் ஆறு பேர் பயனடைவர் என தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 10ம் தேதி இந்த ஒபாமாகேர் காப்பீட்டில் மக்களை சேர்க்க மாபெரும் பிரசாரம் நடைபெற உள்ளது. 'கெட் கவர்ட் அமெரிக்கா டே' என தலைப்பிடப்பட்ட இந்த பிரசாரத்தில் காப்பீட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதவிர ஹெல்த்கேர் என்ற அமெரிக்க அரசு இணையதளத்தை ஜோ பைடன் திறக்க உள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்களை இந்த வலைதளத்தில் அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10ம் தேதி பிரசாரத்தில் சமூக வலைதளங்களும் முக்கியப்பங்கு வகிக்கும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அரசு காப்பீட்டு இணைய தளத்தின் லிங்க் பகிரப்படும். இதன்மூலமாக இது அமெரிக்கர்கள் பலரை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒபாமாகேர் திட்டத்தை முடக்க அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. டிரம்ப் அறிமுகப்படுத்தியிருக்கும் காப்பீட்டில் மாதம்தோறும் அமெரிக்கர்கள் 80 அமெரிக்க டாலரை செலுத்தவேண்டும். நடுத்தர வர்க்கத்திற்கு இந்த தொகை மிகவும் அதிகம் என ஜனநாயகக்கட்சி வாதிடுகிறது. ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒபாமாகேர் காப்பீட்டு திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.