Goldstars News

விஜய் வீட்டில் ரெய்டு: அஜித் டயலாக் வைரலு

news-image

நடிகர் விஜய் வீட்டில் இரு நாட்களாக நடந்த வருமானவரி (ஐ.டி.,) சோதனை பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஐடி சோதனையை கிண்டலடித்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜித் கூறிய கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிகில் திரைப்படத்தில் சம்பளம் பெற்றது தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் 2 நாட்களாக வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. இதில், ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் அஜித் தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் கூறியதாவது: வீட்டில் வைத்த பொருட்களில் பாதியை எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது. வருமான வரி சோதனையால் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைத்து விட்டது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேனே தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மேலும், நான் முறை தவறி எதையும் வீட்டில் வைத்திருக்கவில்லை. இவ்வாறு அஜித் கூறியிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அஜித், விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

இதேபோல், வேறொரு பேட்டியில், மனிதர்கள் மீது வரிகளை விதிக்க வேண்டாம் என்றும், பொதுநிதியை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளின் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதுவே நாட்டின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் எனவும் அஜித் பேட்டியளித்திருந்தார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.