Goldstars News

ஆந்திரா மற்றும் சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு

news-image

ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து, மத்தியப் பிரதேச ஆளுநரான ஆனந்தி பென்னை சத்தீஸ்கர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆனந்தி பென் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இ.எஸ்.எல். நரசிம்மன் இருந்து வந்தார்.

ஆந்திரப் பிரதேச ஆளுநராக கடந்த 2009 முதல் இ.எஸ்.எல். நரசிம்மன் பொறுப்பு வகித்து வருகிறார். 2014-இல் தெலங்கானா மாநிலம் பிரிந்த பிறகு, இரண்டு மாநிலங்களின் ஆளுநராகவும் நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சத்தீஸ்கர் மாநில ஆளுநராக அனுசுயா அய்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசம் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.