Goldstars News

எரித்ரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம் ஐ.நா. நடவடிக்கை

news-image

ஆப்பிரிக்க நாடான எரித்ரியா மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளை நீக்குவதற்கான தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாகவும், கிழக்கு ஆப்பிரிக்க தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி, எரித்ரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2009-ஆம் ஆண்டில் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன்படி, அந்நாட்டில் ஆயுத தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், நிதிசார் தடைகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், எத்தியோப்பியாவுடன் வரலாற்றுச்சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் எரித்ரியா அண்மையில் கையெழுத்திட்டது. இதேபோல், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள ஜிபூட்டி நாட்டுடனான எல்லை பிரச்னையை தீர்க்கவும் எரித்ரியா முன்வந்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. 
எரித்ரியாவின் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை நீக்க வகை செய்யும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க தீபகற்பத்தில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்று ஐ.நா. நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை, ஐ.நா.வுக்கான எரித்ரியா நாட்டின் தூதர் டயே அட்ஸ்கி செலஸி வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் எரித்ரியாவுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையால், சர்வதேச அளவில் முந்தைய நிலைக்கு எரித்ரியா வரும் என்றார்.